விழுப்புரம், ஆக. 31: விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் தாலுக்கா ஆபீசில் லஞ்சம் வாங்கிய வழக்கில் கைதான தற்காலிக சர்வேயரை டிஸ்மிஸ் செய்து நில அளவை துறை உதவி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் தாலுகா கொடுங்கால் கிராமத்தை சேர்ந்தவர் ராமமூர்த்தி(45). கண்டாச்சிபுரம் தாலுகா அலுவலகத்தில் தற்காலிக சர்வேயராக பணிபுரிந்து வந்தார். இவரது உதவியாளராக முகையூர் கிராமத்தை சேர்ந்த மாணிக்கம் மகன் சரத்குமார்(27) என்பவர் செயல்பட்டு வந்தார்.
இந்நிலையில் கஸ்பாகாரணை கிராமத்தை சேர்ந்த ஏழுமலை மகன் சுரேஷ் என்பவர் சித்தாமூர் கிராம எல்லையில் புதிதாக நிலம் வாங்கியதாகவும், அதற்கு நில அளவை செய்ய கண்டாச்சிபுரம் தாலுகா அலுவலகத்தில் நில அளவைக்கு உரிமம் பெற்ற தற்காலிக சர்வேயரை அணுகியுள்ளார். அதற்கு சர்வேயர் ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத சுரேஷ் விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பின்னர் அவர்கள் கூறிய ஆலோசனைப்படி ரசாயனம் தடவிய ரூ.4,500 லஞ்ச பணத்தை கண்டாச்சிபுரம் தாலுகா அலுவலகத்தில் கொடுத்தபோது அதனை சரத்குமார், சர்வேயர் ராமமூர்த்தியிடம் கொடுக்கும்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் இருவரையும் கைது செய்து லஞ்சப்பனத்தை பறிமுதல் செய்தனர். இதனிடையே தற்காலிக சர்வேயர் ராமமூர்த்தி மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு அவரை பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்து விழுப்புரம் நில அளவைத் துறை உதவி இயக்குனர் சீனிவாசன் நேற்று உத்தரவிட்டார்.