வருசநாடு: கண்டமனுார் கிராமத்தில் சிதிலமடைந்துள்ள வி.ஏ.ஓ., அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கண்டமனுார், எட்டப்பராஜபுரம், ஆத்தாங்கரைப்பட்டி, கணேசபுரம் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பகுதிகளுக்கான விஏஓ அலுவலகம் உள்ளது. கடந்த 30 ஆண்டுக்கு முன் கட்டப்பட்ட இந்த அலுவலக கட்டிடம் சிதிலமடைந்துள்ளது. மழை பெய்தால் கட்டிடத்தின் மேற்கூரையில் நீர்க்கசிவு ஏற்படுகிறது. கட்டிடத்தின் சுவர்களும் பல இடங்களில் விரிசல்களுடன் ஆபத்தான நிலையில் உள்ளது. அலுவலர்களுக்கான குடிநீர், கழிப்பறை வசதி கட்டிடத்தில் இல்லை. பல்வேறு கிராமங்களில் இருந்து வரும் பொதுமக்கள் அலுவலக வளாகத்தில் ஒதுங்குவதற்கு நிழல்குடை வசதியும்கூட இல்லை. சிதிலமடைந்த கட்டிடத்தை மாற்றி புதிய கட்டிடம் கட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.