விழுப்புரம், மே 29: விழுப்புரம் மாவட்டத்தில் வீடு கட்ட லோன் வாங்கி தருவதாக கூறி தொழிலாளியிடம் லட்சக்கணக்கில் மோசடி செய்த நபர் மீது எஸ்பியிடம் புகார் அளிக்கப்பட்டது. விழுப்புரம் கலித்திராம்பட்டை சேர்ந்த எழிலரசன். கூலி தொழிலாளி. இவர் நேற்று எஸ்பி அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: பிடாரிபட்டை சேர்ந்த பாபு என்பவர் எனக்கு படிக்கும்போது பழக்கம்.
இந்நிலையில் பாபு மற்றும் சிலர் விக்கிரவாண்டி தனியார் வங்கியில் வீட்டு லோன் வாங்கி தருவதாக கூறியதன்பேரில் அவர்கள் கேட்ட ரூ.6.36 லட்சம் பணத்தை கொடுத்தேன். ஆனால் எனக்கு லோன் வாங்கி கொடுக்கவில்லை. இதனால் சந்தேகத்தின்பேரில் அந்த வங்கிக்கு நேரில் சென்று கேட்டபோது எனது பெயரில் லோன் எதுவும் தேர்வு செய்யப்படவில்லை என்று கூறினார்கள். பின்னர்தான் பாபு அவருக்கு தெரிந்த சிவக்குமார், பாஸ்கர் ஆகியோர் வங்கி மேலாளர், கலெக்ஷன் எக்சிகியூட்டிவ் என்று கூறி என்னிடம் நூதன முறையில் பணம் மோசடி செய்தது தெரிந்தது.
இதுகுறித்து கண்டமங்கலம் காவல்நிலையத்தில் புகார் அளித்தபோது சம்மந்தப்பட்டவர்கள் மோசடி செய்த பணத்தை கொடுப்பதாக தெரிவித்தனர். ஆனால் இதுவரை கொடுக்காமல் ஏமாற்றி வருகின்றனர். எனவே மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை பெற்றுதர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.