சிவகாசி, செப். 3: சிவகாசி அருகே, சித்துராஜபுரத்தில் கலர்புல் ஓவியங்களுடன் குழந்தைகளை வசீகரிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள புதிய அங்கன்வாடி மையம் திறக்கப்பட்டுள்ளது.தமிழ்நாட்டு முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற இந்த 2 ஆண்டுகால ஆட்சியில், அரசு பள்ளிகளில் அங்கன்வாடி மையங்கள் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. இதனால், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், சிவகாசி அருகே உள்ள சித்துராஜபுரம் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.11 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் நேற்று முன் தினம் திறக்கப்பட்டது. திறப்பு விழாவிற்கு சித்துராஜபுரம் ஊராட்சி தலைவர் லீலாவதி சுப்புராஜ் தலைமை வகித்தார். சிவகாசி திமுக ஒன்றியச் செயலாளரும் சிவகாசி ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவருமான விவேகன்ராஜ் புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார்.
வட்டார வளர்ச்சி அலுவலர்கள் புகழேந்தி, தேவஆசீர்வாதம், ஒன்றியக் கவுன்சிலர்கள் விஜயலட்சுமி உதயசங்கர், ராஜம்மாள் சுப்புராஜ், ஊராட்சி துணைத்தலைவர் காளிமுத்து, ஊராட்சி செயலாளர் அருள்ராஜ் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். புதிதாக திறக்கப்பட்டுள்ள இந்த அங்கன்வாடி மையம் பெற்றோர்கள், குழந்தைகளை கவரும் வகையில் மிகவும் கலர்புல்லாக கட்டப்பட்டுள்ளது. எண்களின் கருப்பொருள்கள், பழங்களின் வண்ணமயமான படங்கள் மற்றும் காய்கறிகளின் ஓவியங்கள், பூக்கள், மாதங்கள், நாட்களின் பெயர்கள், தலைவர்களின் படங்கள் மற்றும் பிற தகவல் விளக்கப்படங்கள் இடம் பெற்றிருக்கின்றன. இது குழந்தைகளையும் அவர்களது பெற்றோர்களையும் கவர்ந்துள்ளது.