சூலூர், ஆக. 6: கோவை மாவட்டம் சூலூர் தாலுகாவில் உள்ள கணியூர் ஊராட்சிக்கு சிறந்த ஊராட்சி நிர்வாகத்திற்கான ஐஎஸ்ஓ தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது. அலுவலக குறிப்பேடுகள் மற்றும் அனைத்து துறை பணிகளையும் ஆய்வு செய்து இந்த சான்று கணியூர் ஊராட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது. மாவட்டத்திலேயே ஐஎஸ்ஓ தரச்சான்று பெரும் முதல் ஊராட்சி என்ற பெருமையை கணியூர் ஊராட்சி பெற்றுள்ளது.
நேற்று கணியூர் ஊராட்சி தலைவர் வேலுச்சாமி மற்றும் செயலர் ஜெகதீசன் மற்றும் ஊழியர்கள் நேரில் சென்று மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடியிடம் ஐஎஸ்ஓ தரச்சான்றை காட்டிவாழ்த்து பெற்றனர். சார்-ஆட்சியர் சுவேதா சுமன், ஊராட்சி இணை இயக்குனர் சரவணகுமார், சூலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துராஜ் ஆகியோர் உடன் இருந்தனர். தொடர்ந்து கருமத்தம்பட்டியில் நடந்த நிகழ்ச்சிக்காக வந்திருந்த கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் முத்துசாமியிடம் ஐஎஸ்ஓ தரச்சான்றிதழை ஊராட்சி தலைவர் வேலுச்சாமி கொடுத்து வாழ்த்து பெற்றார்.