ஈரோடு, செப். 1: அந்தியூர் அடுத்துள்ள கொமராயனூரை சேர்ந்தவர் கனகராஜ் (40). இவரது மனைவி ரேவதி (32). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 11ம் தேதி கார் பழுது பார்ப்பதற்காக அந்தியூர் செல்வதாக கூறிச்சென்ற கனகராஜ் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த ரேவதி செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் செல்போன் ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து பல்வேறு இடங்களில் தேடியும் கனகராஜ் குறித்த எவ்வித தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து மனைவி ரேவதி வெள்ளிதிருப்பூர் போலீசில் இது குறித்து புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.