கடலூர், ஆக. 23: கடலூர் மாவட்டம் பெலாந்துறை புது காலனி பகுதியை சேர்ந்த பாஸ்கர் மனைவி காந்திமதி என்பவர் கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: எனக்கு நான்கு பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த 8ம் தேதி என் வீட்டில் நானும், எனது கணவர் பாஸ்கரும் குழந்தைகளுடன் பேசி கொண்டிருந்தோம். அப்போது கருவேப்பிலங்குறிச்சி காவல் உதவி ஆய்வாளர் சிவராமன் மற்றும் 4 காவலர்கள், என் வீட்டின் உள்ளே வந்து போதை பொருளை எங்கே மறைத்து வைத்திருக்கிறாய் என்று என் கணவரிடம் கேட்டு மிரட்டினர்.
மேலும் அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்து காவல்துறையினர் எங்கள் வீட்டை சோதனை செய்தனர்.காவல்துறையினர் சோதனை செய்து என் வீட்டிலிருந்து எந்த புகையிலை பொருட்களையும் எடுக்கவில்லை. ஆனாலும் எனது கணவரை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அதன் பிறகு நான் கருவேப்பிலங்குறிச்சி காவல் நிலையத்திற்கு சென்றேன். உதவி ஆய்வாளர் சிவராமன், எனது கணவர் பாஸ்கர் மீது வழக்கு பதிவு செய்துள்ளதாக கூறினார். பின்னர் எனது கணவரை இரண்டு முறை கடலூர் மத்திய சிறையில் சென்று சந்தித்தேன். சீக்கிரம் என்னை வெளியில் எடுத்துவிடு, எனக்கு பயமா இருக்கு என்று என்னிடம் கேட்டுக்கொண்டார்.
கடந்த 20ம் தேதி எனது கணவருக்கு உடல்நிலை சரியில்லை என்று எங்கள் ஊர் பஞ்சாயத்து தலைவர் மூலம் தெரிந்து கொண்டேன். உடனே கடலூர் அரசு மருத்துவமனைக்கு விரைந்து என் கணவரை பார்க்க சென்றேன். அப்போது கடலூர் அரசு மருத்துவமனையில் எனது கணவர் இறந்து கிடந்தார். நல்ல உடல்நிலையில் இருந்த எனது கணவர் உடல் நிலைக்கு என்ன ஆனது?. நல்ல நிலையில் இருந்தவர் எப்படி திடீரென இறந்தார்?. அவர் எங்கு இறந்தார்?, எப்படி இறந்தார் என்று எனக்கு தெரியவில்லை. அவரது மரணத்தில் எனக்கு சந்தேகம் உள்ளது. எனவே இது குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.