போடி, ஜூலை 30: போடி அருகே சுந்தரராஜபுரம் முருகன் கோயில் தெருவை சேர்ந்தவர் அருண், விவசாயி. இவர் தனது மனைவி சுலோச்சனா(31) உடன் இருசக்கர வாகனத்தில் பெருமாள் கவுண்டன்பட்டிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சாய்பாபா கோயில் அருகே பின் தொடர்ந்து வந்த ஹெல்மெட் அணிந்த மர்மநபர் திடீரென பின் சீட்டில் அமர்ந்திருந்த சுலோச்சனா கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தாலிச்செயினை வேகமாக பறிக்க முயன்றார்.
ஆனால் சுதாரித்துக்கொண்ட சுலோச்சனா செயினை கையில் பிடித்துக் கொண்டார். இதனால் செயின் அறுந்து அவரின் கையிலேயே சிக்கிக்கொண்டது. இதையடுத்து மர்மநபர் கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார். இதுகுறித்து போடி தாலுகா காவல் நிலையத்தில் சுலோச்சனா புகார் கொடுத்தார். அதன்பேரில் எஸ்.ஐ மணிகண்டன் மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து மர்மநபரை தேடி வருகின்றனர்.