வந்தவாசி, மே 18: வந்தவாசி அருகே மாற்றுத்திறனாளி கணவரை அடித்துக்கொலை செய்துவிட்டு விபத்து நாடகம் ஆடிய அவரது மனைவி மற்றும் மைத்துனரை போலீசார் நேற்று கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த செட்டிக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் பலராமன் மகன் டெல்லிகணேஷ்(35), மாற்றுத்திறனாளி. அங்குள்ள டாஸ்மாக் பாரில் கூலி வேலை செய்து வந்தார். இவரது மனைவி சுகன்யா(31). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். தினந்தோறும் மது போதையில் வீட்டுக்கு வரும் டெல்லிகணேஷ் மனைவி சுகன்யாவிடம் தகராறு செய்து வந்ததாகவும், தான் மாற்றுத்திறனாளி என்பதால் மனைவியை சந்தேகப்பட்டு அடித்து துன்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் 19ம் தேதி அருகே உள்ள உறவினர் வீட்டிற்கு சுகன்யா சென்று விட்டு வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது, டெல்லிகணேஷ் எங்கு சென்று வருகிறாய் என கேட்டு தகராறு செய்து சுகன்யாவை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கீழ்நமண்டி கிராமத்தில் உள்ள தனது தந்தையிடம் சுகன்யா செல்போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, சுகன்யாவின் சகோதரர் நவீன்குமார்(28) செட்டிக்குளம் கிராமத்திற்கு வந்து மாமா டெல்லிகணேஷிடம் தட்டிக்கேட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் டெல்லிகணேஷின் பின்பக்க தலையில் கட்டையால் தாக்கினார்களாம். பின்னர், மயங்கி கிடந்த டெல்லிகணேசனை அவரது தாய் தமிழ்ச்செல்வி(58) பார்த்துள்ளார். உடனே அவரை மீட்டு தெள்ளார் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். தொடர்ந்து, வந்தவாசி தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
ஆனால், அவரது உடல் நிலை ஆபத்தான நிலையில் இருந்ததால் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு பைக்கில் தவறி விழுந்ததாக கூறி சிகிச்சை அளிக்கும்படி கேட்டதால் செங்கல்பட்டு அரசு மருத்துவர்களும் சிகிச்சை அளித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி 22ம் தேதி டெல்லிகணேஷ் பரிதாபமாக பலியானார். இந்த சம்பவம் குறித்து அவரது தாயார் தமிழ்ச்செல்வி தெள்ளார் போலீசில் புகார் செய்தார். அதில், தனது மகன் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறியிருந்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ராஜகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். இந்நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கை நேற்று முன்தினம் தெள்ளார் போலீசாருக்கு கிடைத்தது. அதில், டெல்லிகணேஷ் கட்டையால் தாக்கிப்பட்டதால்தான் பலியானார் என கூறப்பட்டிருந்தது. இதையடுத்து, இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து, நேற்று அதிகாலை செட்டிக்குளம் கிராமத்தில் இருந்த சுகன்யாவை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது, சுகன்யா தனது வாக்குமூலத்தில் கூறியதாக போலீசார் தெரிவித்ததாவது: கணவர் டெல்லிகணேஷ் வெளியே சென்று விட்டு வந்தால் என்னை தவறுதலாக பேசி அடித்து துன்புறுத்தி வந்தார். பலமுறை இதேபோல் நடந்ததால் எனது குடும்பத்தினரிடம் கூறினேன். எனது தம்பி நவீன்குமார் இதனை தட்டிக்கேட்டபோது என்னை தவறுதலாக பேசியதால், இருவரும் சேர்ந்து கட்டையால் அவரது தலை மீது தாக்கினோம். பின்னர், யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக உறவினர்களுடன் சேர்ந்து ஆரம்ப சுகாதார நிலையம், வந்தவாசி தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். மேலும், செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உள்ள காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று பைக்கில் இருந்து தவறி விழுந்துவிட்டார் என பொய்யான தகவல் கூறி அரசு மருத்துவமனையில் சேர்த்தோம். பின்னர், அங்கு மருத்துவர் பரிந்துரையின் பேரில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தோம். ஆனால், இதுகுறித்து யாருக்கும் சந்தேகம் வராதபடி உடனிருந்து கவனித்துக் கொண்டேன். இவ்வாறு அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
இதற்கிடையில், சுகன்யாவை போலீசார் பிடித்ததை தெரிந்து கொண்டு அவரது தம்பி நவீன்குமார் சென்னைக்கு தப்பியோட முயன்றபோது, கீழ்நமண்டி கிராமத்தில் உள்ள குளக்கரை அருகே போலீசார் மடக்கி பிடித்தனர். பின்னர், கைது செய்யப்பட்ட சுகன்யா, அவரது தம்பி நவீன்குமார் ஆகியோரை வந்தவாசி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். தொடர்ந்து, மாஜிஸ்திரேட் செந்தில்குமார் உத்தரவின்பேரில் சுகன்யா வேலூர் பெண்கள் தனிச்சிறையிலும், நவீன்குமார் ஆண்கள் மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டனர். கணவனை கட்டையால் அடித்துக்கொலை செய்து விட்டு மனைவியும், மைத்துனரும் விபத்து நாடகம் ஆடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.