உடுமலை, டிச.13: கட்டுமான பொருட்களின் விலை உயர்வை தடுக்க கோரி உடுமலை மத்திய பேருந்து நிலையம் முன்பு உடுமலை சிவில் என்ஜினீயர்ஸ் அசோசியேசன் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க தலைவர் கோபாலகிருஷ்ணன் தலைமையில், செயலாளர் சாந்துமுகமது, பொருளாளர் ஸ்ரீநாத் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். பின்னர் கோட்டாட்சியரை சந்தித்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
எம் சாண்ட், பி சாண்ட், ஜல்லி கற்களின் வலையை கிரஷர் உரிமையாளர்கள் கடுமையாக உயர்த்தி உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் விலை உயர்த்தப்பட்டது. தற்போது மீண்டும் விலை உயர்வு என்பது, பொதுமக்களையும், கட்டுமான துறையில் ஈடுபட்டுள்ளவர்களையும் மிகவும் பாதித்துள்ளது.
எனவே, கட்டுமான பொருட்களை விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். நியாயமற்ற விலை ஏற்றம் மற்றும் பொருட்களின் தரத்தை கண்காணிப்பதற்கு பொறியாளர்கள் சங்க உறுப்பினர்கள், பொதுப்பணித்துறை சார்ந்த பொறியாளர்கள் உள்ளடங்கிய குழு ஒன்றை நியமிக்க வேண்டும். நமது மாநில கனிம வளங்களை அண்டை மாநிலங்களுக்கு எடுத்துச் செல்லாமல் தடுத்து நிறுத்த வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.