கரூர், பிப். 18: கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது.மாவட்ட கலெக்டர் தங்கவேல் தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று துறை அதிகாரிகளிடம் வழங்கி நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.இந்த முகாமில், கரூர் மாவட்ட கனரக ஓட்டுநர்கள் வழங்கிய மனுவில் தெரிவித்துள்ளதாவது: கரூர் மாவட்டத்தில் 500க்கும் மேற்பட்ட கட்டுமான பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகன ஓட்டுநர்கள் உள்ளோம். நாங்கள், கரூர் மாவட்டத்தில் உள்ள வாடகை வாகனங்கள் மற்றும் தனியார் வாகனங்களை இயக்கி வருகிறோம்.
கிரஷர் பகுதியில் இருந்தும் கட்டுமான பொருட்களை ஏற்றிச் செல்கிறோம். ஆனால், அதற்கு உண்டான ட்ரான்ஸ்லேட் பாஸ் மற்றும் ஜிஎஸ்டி பில் முறையாக வழங்க வேண்டும். ஆனால், எங்களுக்கு டிரான்ஸ்சிஸ் பாஸ் தர மறுக்கப்படுகிறது. இதனால், வாகனங்கள் செல்லும் வழியில் பல்வேறு பிரச்னைகளுக்கு ஆளாகிறோம். எனவே, இந்த பிரச்னை குறித்து பார்வையிட்டு தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.