தேனி, செப்.8: கட்டுமான தொழிலாளர்கள், தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியம் சார்பில் தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. நலவாரியத்தில் பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளர்கள் பணி செய்யும் போது பணியிடத்தில் விபத்தினால் மரணமடைந்தால் ரூ.5லட்சம் நிதி வழங்கப்பட்டு வருகிறது. கட்டுமானத் துறையில் ஈடுபடும் கட்டுமான நிறுவனங்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் தங்கள் நிறுவனத்தில் கட்டுமானத் தொழிலில் பணிபுரியும் தொழிலாளர்களை தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளகள் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்ய வேண்டும்.
மேலும் வெளிமாநிலங்களில் இருந்து இடம் பெயர்ந்து தமிழ்நாட்டில் கட்டுமானத் தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களை நல வாரியத்தில் பதிவு செய்ய அரசு ஆணை பிறப்பித்துள்ளது. எனவே, ஒப்பந்ததாரர்கள் உரிமம் பெறும் பொழுதே கட்டுமானப் பணியில் ஈடுபடுத்தப்படும் தொழிலாளர்கள் அனைவரையும் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்த பின்னரே நலத்திட்ட உதவிகள் பெற இயலும். கட்டுமானத் தொழிலில் பணிபுரியும் தொழிலாளர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பதிவு செய்யவும் மற்றும் கூடுதல் விபரம் அறிய தொழிலாளர் நல அலுவலர் அலுவலகத்தை அணுகவும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.