திருத்துறைப்பூண்டி, பிப். 20: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கட்டிமேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் மாறுவேடப்போட்டி இலக்கிய மன்றத்தின் சார்பாக நடைபெற்றது. இதில் 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை உள்ள மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். பள்ளி தலைமையாசிரியர் மு.ச. பாலு தலைமை வகித்து பேசும்போது, உண்மையான தோற்றத்தை மறைத்து போட்டுக் கொள்ளும் வேடம் மாறுவேடம். இப்போட்டியின் வாயிலாக மாணவர்கள் தங்களின் வேடத்திற்கு ஏற்ப விடுதலை வேட்கை, பெண்கள் முன்னேற்றம், நாட்டின் வளர்ச்சி, இளைஞர் எழுச்சி ஆகியவற்றை வலியுறுத்தலாம் என்றார்.
இந்நிகழ்ச்சியின் நடுவர்களாக ஆசிரியர்கள் தனுஜா, ரகு, வடிவேல் ஆகியோர் பணியாற்றினர். மாணவர்கள் வேலு நாச்சியார், விவேகானந்தர், அவ்வை, காந்தியடிகள், பாரதியார், பீமன், ஏஞ்சல், அன்னை தெரசா, கண்ணகி, மருத்துவர், குடுகுடுப்பைக்காரன், விவசாயி போன்ற கதாபாத்திரங்களில் பங்கு பெற்றனர். ஆசிரியை வேம்பு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் ராஜா, கபீர் தாஸ் ஆகியோர் செய்திருந்தனர்.