கீழக்கரை, அக்.18: கீழக்கரை பகுதியில் கட்டிட பணியில் ஈடுபட்ட வடமாநில தொழிலாளி பலியானது பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர். கீழக்கரை நகரில் கட்டுமானப் பணிகளில் வடமாநில தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானோர் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது கீழக்கரை அஹமது தெரு அருகே புதிய வீடு கட்டும் பணி நடக்கிறது.
இந்த இடத்தில் தங்கி வேலை பார்த்து வந்த உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சுனில் குமார்(23) மாடியில் இருந்து நேற்று அதிகாலை தவறி விழுந்து கிடந்தார். அவரை, சக தொழிலாளர்கள் ஆம்புலன்ஸ் மூலம் கீழக்கரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனையில் அவர் இறந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவரது உடல் மருத்துவபரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. இது தொடர்பாக கீழக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.