கோவை, ஜூன் 14: கோவை காந்திநகர் சிலோன் காலனியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (48), பெயிண்டர். இவர், நேற்று முன்தினம் சுந்தராபுரம் அஸ்டலட்சுமி நகரில் உள்ள ஒரு வீட்டில் பெயிண்ட் அடித்துக்கொண்டிருந்தார். அப்போது, அவர் எதிர்பாராத விதமாக 25 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தார். இதில், தலையில் பலத்த காயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு கோவை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அனுப்பினர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் சுரேஷ்குமார் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின்பேரில், சுந்தராபுரம் போலீசார், உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி தொழிலாளியை பணிக்கு அமர்த்தியதாக சுந்தராபுரம் முருகாநகரை சேர்ந்த கட்டிட மேஸ்திரி மாரிமுத்து (42) மற்றும் கட்டிட உரிமையாளர் தண்டபாணி (68) ஆகிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.