பூதப்பாண்டி, ஜூன் 4: இறச்சகுளத்தில் செல்போன் கடையின் மாடியில் இருந்து மாங்காய் பறிக்க முயன்றபோது தவறி விழுந்து ஆக்கர் வியாபாரி இறந்தார். இறச்சகுளம் விஷ்ணுபுரம் காலனியை சேர்ந்தவர் ஜெகநாதன் (68). ஆக்கர் வியாபாரி. அவரது மனைவி சுப்பம்மாள் (60). நாகர்கோவில் மாநகராட்சியில் தற்காலிக தூய்மை பணியாளராக வேலைபார்த்து வருகிறார். இந்தநிலையில் ஜெகநாதன் நேற்று முன்தினம் மதியம் இறச்சகுளம் ஜங்சனுக்கு சென்றார். அங்குள்ள செல்போன் கடையையொட்டி மாமரம் நின்றுள்ளது. ஜெகநாதன் செல்போன் கடையின் மாடியில் ஏறிநின்று மாமரத்தில் மாங்காய் பறிக்க முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவர் சுயநினைவை இழந்தார். இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் அளித்தனர். ஆம்புலன்சில் மருத்துவ ஊழியர்கள் விரைந்து வந்து ஜெகநாதனை பரிசோதனை செய்தபோது, ஏற்கனவே அவர் இறந்துவிட்டது தெரிய வந்தது. இதுகுறித்து சுப்பம்மாள் அளித்த புகாரின் பேரில் பூதப்பாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கட்டிடத்தின் மாடியில் நின்று மாங்காய் பறிக்க முயன்ற வியாபாரி தவறி விழுந்து பலி இறச்சகுளத்தில் பரிதாபம்
0