வேலூர், மே 25: தனது கடை முன்பு அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தவர்களை தட்டிக்கேட்ட பஞ்சர் கடைக்காரருக்கு சரமாரி அடி, உதை விழுந்தது. வேலூர், பெருமுகையை சேர்ந்தவர் செந்தில்குமார்(42). இவர் வேலூர் பழைய பைபாஸ் சாலை நேஷனல் தியேட்டர் அருகே பஞ்சர் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் வேலூர் தோட்டப்பாளையம் அருகந்தம்பூண்டியை சேர்ந்த அர்ஜுனன்(34), வேலூர் புதுகுடியான்சத்திரத்தை சேர்ந்த ஏழுமலை(49) உட்பட 6 பேர் செந்தில்குமாரின் கடை முன்பு அமர்ந்து மது அருந்திக்கொண்டிருந்தனர். இதனை பார்த்த செந்தில்குமார் அவர்களிடம், ‘கடை முன்பு அமர்ந்து ஏன் மது அருந்துகிறீர்கள், உணவு உண்ணுகிறீர்கள்?’ என தட்டிக் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்தவர்கள் செந்தில்குமாரை தகாத வார்த்தைகளால் திட்டி சரமாரியாக தாக்கியதுடன், கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். இதுகுறித்து செந்தில்குமார் அளித்த புகாரின் பேரில் வேலூர் வடக்கு போலீஸ் எஸ்ஐ பிரகாசம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அர்ஜுனன் மற்றும் ஏழுமலையை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 4 பேரை தேடி வருகின்றனர்.
கடை முன்பு மது குடிப்பதை தட்டிக்கேட்டவருக்கு அடி, உதை 2 பேர் கைது
0