பரமத்திவேலூர், ஜூலை 3: நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி சுவாமி நகரை சேர்ந்தவர் சுரேஷ் (46). இவர் வேகவுண்டம்பட்டியில் நாமக்கல்-சாலையில் இரும்பு மற்றும் சிமெண்ட் கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் கடந்த 29ம் தேதி இரவு, வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார். மீண்டும் 30ம் தேதி காலை வழக்கம் போல், காலை கடையை திறந்த வந்துள்ளார். அப்போது, கடையின் பின்பக்கம் உள்ள இரும்பு தகர சீட்டுகள் கழட்டப்பட்டு கடையில் இருந்த 3 டன் எடையுள்ள 60 கட்டு கம்பிகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.1.80லட்சம் என கூறப்படுகிறது. இது குறித்து வேலகவுண்டம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். நேற்று நாமக்கல் சாலையில் வேலகவுண்டம்பட்டி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக டூவீலரில் வந்த 4பேரை, சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கடந்த 29ம் தேதி இரும்பு கடையில் கம்பிகளை திருடி சென்றவர்கள் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், புதுக்கோட்டை மாவட்டம், அகரப்பட்டி பூசத்துறையை சேர்ந்த டிரைவர் முருகேசன் (56), திருவப்பூர் பகுதியை சேர்ந்த லோடுமேன் சரவணன் (32), கோயில்பட்டியைச் சேர்ந்த லோடுமேன் நல்லதம்பி (32), திருக்கோகர்ணம், மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த டிரைவர் ராஜா என்கிற கோழிராஜா (42) என்பதும், கடையில் கம்பிகளை திருடியதையும் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து, போலீசார் 4பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.