கடையநல்லூர், பிப்.19: கடையநல்லூர் நகராட்சியின் 20வது வார்டு பகுதியில் இடம்பெற்ற கானாங்குளமானது முறையாகப் பராமரிப்பு செய்யப்படாத காரணத்தால் புதர் மண்டியும், களை இழந்தும் காணப்பட்டது. இதனால் வேதனைக்கு உள்ளான அப்பகுதி மக்கள் சார்பில், இக்குளத்தை முழுமையாக சீரமைக்க வேண்டும் என அவ்வார்டு கவுன்சிலர் யாசர்கான் நகர்மன்றத் தலைவரான மூப்பின் ஹபீபுர் ரஹ்மானிடம் கோரிக்கை விடுத்தார். இதை ஏற்றுக்கொண்ட அவர் மேற்கொண்ட முயற்சியால் இதற்காக கலைஞர் நகர்ப்புற வளர்ச்சி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ₹40 லட்சம் மற்றும் பொது நிதியின் கீழ் ₹11.50 லட்சம் என மொத்தம் ₹51.50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்நிதியின் கீழ் சுற்றிலும் நடைபாதை, மின்விளக்குகள் அமைத்து குளத்தை முற்றிலும் சீரமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடந்தன.
இப்பணிகள் அனைத்தும் பணிகள் நிறைவடைந்த நிலையில் கவுன்சிலர் யாசர்கான் முன்னிலையில் திறப்புவிழா நேற்று நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற நகர்மன்ற தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான், முற்றிலும் சீரமைக்கப்பட்ட கானாங்குளத்தை திறந்துவைத்து பொதுமக்களுக்கு அர்ப்பணித்தார். நிகழ்வில் கடையநல்லூர் நகராட்சி உதவி செயற்பொறியாளர் அப்துல் காதர், சுகாதார அலுவலர் பிச்சையா பாஸ்கர், சுகாதார ஆய்வாளர் சிவா, 19வது வார்டு கவுன்சிலர் அக்பர் அலி, ஜமாத்தார்கள் மற்றும் திமுக, எஸ்.டி.பி.ஐ. நிர்வாகிகள், ஊர் மக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.