Sunday, April 14, 2024
Home » கடைசி கட்ட கூட்டணி பேரத்தில் வெல்ல போவது யார்?

கடைசி கட்ட கூட்டணி பேரத்தில் வெல்ல போவது யார்?

by Arun Kumar

மக்களவை தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒரு சில கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்து உள்ளன. திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஓரிரு நாட்களில் வேட்பாளர்களை அறிவிக்க உள்ளனர். ஆனால், அதிமுக மற்றும் பாஜவினர் கூட்டணிக்காக பேரம் பேசி வருகின்றனர். இரு கட்சிகளும் பாமக, தேமுதிகவுடன் கூட்டணி பேரம் நடத்தி வருகிறது.

அதிமுக சார்பில் சிவி சண்முகம், பாமக நிறுவனர் ராமதாசை ஏற்கனவே 2 முறை சந்தித்து பேசினார். அப்போது 7 மக்களவை தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா சீட், தேர்தல் செலவுக்கு பணம் வேண்டும் என்று ராமதாஸ் கேட்டார். ஆனால், அதிமுக சார்பில் 7 மக்களவை தொகுதிகள், தேர்தல் செலவுக்கு தருவதாக கூறினர். இதை அக்கட்சியின் நிறுவனரான ராமதாசும் ஏற்றுக் கொண்டதாக தகவல் வெளியானது. இதனால் அதிர்ச்சியடைந்த பாஜ கொங்கு மண்டலம், வடமாவட்டங்களில் டெபாசிட் கூட வாங்க வேண்டுமென்றால் பாமக தயவு வேண்டும் என்று எண்ணியது. இதனால் ஒன்றிய அமைச்சர்கள் சிலர் ரகசியமாக பாமக தலைவர் அன்புமணியை சந்தித்து பேசினர்.

அப்போது அன்புமணி மீது உள்ள ஒரு வழக்கை சுட்டிக்காட்டி, பாமகவுக்கு 10 மக்களவை தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா சீட், ஒன்றிய அமைச்சர் பதவி கொடுப்பதாக கூறினர். இதனால் வழக்குக்கு பயந்தும், ஒன்றிய அமைச்சர் பதவிக்கும் ஆசைப்பட்டும் அன்புமணி பாஜ பக்கம் சாய்ந்தார். ராமதாஸ், மாவட்ட செயலாளர்கள் பெரும்பாலானோர் அதிமுக பக்கம் கூட்டணி வைக்க விரும்பும் நிலையில், அன்புமணி மட்டும் பாஜ பக்கம் போலாம் என்று கூறினார். இதனால் ஆத்திரமடைந்த மாவட்ட செயலாளர்கள், ‘பாஜ பக்கம் போனால் எப்படி நாம் ஓட்டு கேட்பது. அன்புமணி ஆசைக்கும், பயத்துக்கும் நாங்கள் பலிகிடாவா’ என்று எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த விவகாரத்தில் ராமதாஸ்-அன்புமணிக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மாவட்ட செயலாளர்களை கூட்டி கருத்துக்களை கேட்டறிந்து முடிவெடுக்கலாம் என ராமதாஸ் திட்டமிட்ட நிலையில், கடைசியாக அதுவும் திடீரென ஒத்தி வைக்கப்பட்டது. கூட்டணி விவகாரத்தில் கட்சி தலைமைக்குள் ஒருமித்த கருத்து ஏற்படாததே கூட்டம் ரத்தானதற்கு காரணம் என தகவல் வெளியானது.

இந்தநிலையில் பாமகவுக்கு 7 மக்களவை தொகுதி, ஒரு ராஜ்யசபா சீட் கொடுக்க அதிமுக முன்வந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால், கடைசி கட்ட முயற்சியாக பாமக நிறுவனர் ராமதாசை சந்திக்க அதிமுக தரப்பில் முயற்சிகள் எடுக்கப்பட்டது. சிவி. சண்முகம், கேபி முனுசாமி உள்ளிட்டோர் தைலாபுரத்தில் ராமதாசை சந்தித்து கூடுதல் தொகுதியை ஒதுக்கி, கூட்டணியை இறுதி செய்ய இருப்பதாக தகவல் பரவியது. ஆனால் நேற்று மாலை வரை அதிமுக தரப்பில் யாரும் அங்கு வரவில்லை. இதனால் பாமகவை இழுக்கும் அதிமுகவின் கடைசிகட்ட முயற்சிக்கு பலன் கிடைக்குமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

அதேவேளையில் சென்னையில் அன்புமணியை, ஒன்றிய அமைச்சர் பியூஷ்கோயல் உள்ளிட்ட சிலர் ரகசியமாக சந்தித்து இறுதிகட்ட பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகவும், இன்று மாலைக்குள் பாஜவுடன் கூட்டணி என்பதை பாமக உறுதிசெய்து அறிவித்துவிடும் என்றும் அக்கட்சி வட்டாரத்தில் பரவலாக பேச்சு அடிபடுகிறது. கட்சியின் எதிர்காலம், சில தனிப்பட்ட காரணங்களுக்கு பாமக நிறுவனர் ராமதாசும் ஒப்புதல் அளிப்பார் என்ற தகவல் பரவி பாமக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் தலைமையின் முடிவுக்காக பாமக நிர்வாகிகளும், தொண்டர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால் உடனே கூட்டணி முடிவு அறிவிக்கப்பட வேண்டுமென்ற எதிர்பார்ப்பு அக்கட்சியினரிடம் எழுந்துள்ளது.

You may also like

Leave a Comment

5 × 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi