கிருஷ்ணகிரி, ஜூலை 23: கிருஷ்ணகிரி வெங்கடாப்பூர் ஜாகீமோட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் குமரேசன் (36). இவர் கட்டுமான பொருட்கள் மொத்த விற்பனை கடை வைத்துள்ளார். இவரது வாட்ஸ்அப் எண்ணிற்கு கடந்த 3ம் தேதி அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், நீங்கள் அதிகளவில் கட்டுமான பொருட்களை வாங்கினால், அவை மிக குறைந்த விலைக்கு கொடுக்கப்படும். உங்களுக்கு தேவையான பொருட்கள் குறித்த பட்டியலை, எங்களுக்கு அனுப்பி வையுங்கள் என தெரிவித்தார். அதன்படி, குமரேசன் தனக்கு தேவையான பொருட்களின் பட்டியலை அவர்களுக்கு அனுப்பி வைத்தார். மேலும், அவர்கள் கொடுத்த வங்கி கணக்கிற்கு ₹5 லட்சத்து 65 ஆயிரத்து 915ஐ அனுப்பி வைத்தார். ஆனால், அவர்கள் கூறியபடி கட்டுமான பொருட்கள் எதுவும் அனுப்பி வைக்கவில்லை. பலமுறை அந்த நம்பருக்கு தொடர்பு கொண்டும் போனை எடுக்கவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த குமரேசன் நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.