வேலூர், ஜூலை 28: வேலூர் மாவட்டத்தில் நேற்று அனைத்து காவல்நிலைய எல்லைப்பகுதிகளில் கல்வி நிறுவனங்கள் அருகே கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்கள் பதுக்கல் மற்றும் விற்பனையை தடுக்க எஸ்பி மணிவண்ணன் பல்வேறு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். அதன்படி போலீசார் பல்வேறு இடங்களில் அடிக்கடி ரெய்டு நடத்தி கஞ்சா மற்றும் போதைப்பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர். அதில் தொடர்புடையை நபர்களை கைது செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று வேலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து காவல்நிலையங்களில், அதன் எல்லைக்கு உட்பட்ட பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் அருகே உள்ள கடைகள், ெபாது இடங்களில் இன்ஸ்பெக்டர், எஸ்ஐக்கள் ஆகியோர் அதிரடி சோதனை நடத்தினர். அங்கு குட்கா, கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் ஏதேனும் பதுக்கி விற்பனை செய்யப்படுகிறதா? என்று ஒவ்வொரு கடைக்கடையாக சென்று ஆய்வு செய்தனர். மேலும் குடோன்களில் பதுக்கி வைக்கப்படுகிறதா? என்பதையும் கண்காணித்து அதிரடியாக சோதனை நடத்தினர்.