காஞ்சிபுரம், பிப்.8: காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று காலை கடும் பனிப்பொழிவின் காரணமாக, அப்பகுதிகள் முழுவதும் குளிர் பிரதேசம் போல் மாறியது. இதனால், வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றனர். மேலும், பொதுமக்கள் வெளியே வரமுடியாமல் வீடுகளுக்குள்ளே முடங்கினர். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலம் முடிவடைந்தநிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் மிதமான மழை பெய்தது. மழைக்காலம் முடிவடைந்து பொதுவாக வறண்ட வானிலை நிலவிவரும்நிலையில், நேற்று காலை காஞ்சிபுரத்தில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டது.
தை மாதம் முடிவடைய உள்ளநிலையில் பனிப்பொழிவு காலமான மார்கழி மாதத்தைப்போல் காஞ்சிபுரம் நகரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று காலை சுமார் 8.30 மணி வரை கடும் பனிப்பொழிவு காணப்பட்டது. காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான கோனேரிக்குப்பம், ஏனாத்தூர், ஓரிக்கை, தாமல், பரந்தூர், வையாவூர், சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, பொன்னேரிக்கரை, ரயில் நிலையம், அய்யங்கார்குளம், புஞ்சை அரசன் தாங்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் திடீரென குளிர் பிரதேசமான ஊட்டியைபோல் மாறியது. இதனால், செவிலிமேடு பாலாறு மேம்பாலம் பகுதியில் எதிரே வரும் வாகனங்கள் சிறிது தூரத்தில் மட்டுமே தெரிந்ததால் வாகன ஓட்டிகள் சாலையில் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே சிரமத்துடன் ஓட்டிச்சென்றனர். இதனிடையே, பெதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வரமுடியாமல் முடங்கியதால் அவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.