பொன்னேரி, செப். 1: பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே கடல் சீற்றம் காரணமாக மணல் திட்டுக்களாக மாறிய சாலையினை பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் ஆய்வு செய்தார்.
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்த பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே கருங்காலி என்ற இடத்தில் நேற்று முன்தினம் கடல் சீற்றம் காரணமாக மீண்டும் மணல் திட்டுகளாக மாறிய சாலையால் பணிக்கு செல்லும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இருசக்கர வாகன ஓட்டிகள் கடல் மணலில் சிக்கி அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இதுகுறித்து, தகவலறிந்த பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் நேரில் சென்று ஆய்வு செய்து தற்காலிகமாக 2 நாட்களுக்குள் கற்களைக் கொட்டி உடனடியாக பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என அப்பகுதி மக்களிடம் தெரிவித்தார். முதற்கட்டமாக மண் திட்டுகள் பொக்லைன் இயந்திரம் மூலம் அப்புறப்படுத்தப்பட்டது. பின்னர் துரை சந்திரசேகர் எம்எல்ஏ கூறும்போது, 2024-2025ம் ஆண்டிற்கான நிதியிலிருந்து ₹50 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனைக்கொண்டு, மிக விரைவில் மேம்பாலம் கட்டுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். அதன் பிறகு 40 கிலோ மீட்டர் சுற்றி செல்லும் நிலை மாறும் என்றார். அப்போது மீஞ்சூர் ஒன்றிய பொறியாளர் முத்துலட்சுமி, காங்கிரஸ் நிர்வாகிகள் அத்திப்பட்டு புருஷோத்தமன், பழவேற்காடு ஜெயசீலன், ராஜ்குமார், உதயகுமார், உதயராஜ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.