புதுச்சேரி, ஜூன் 3: கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, புதுச்சேரியில் கோடை விடுமுறைக்கு பிறகு அரசு மற்றும் தனியார் பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டது. அரசு பள்ளிகளுக்கு வந்த மாணவ, மாணவிகளுக்கு ஆசிரியர்கள் இனிப்பு, பூங்கொத்து, பேனா, பென்சில், நோட்புக் உள்ளிட்டவை வழங்கி உற்சாகமாக வரவேற்றனர். 2025-26ம் கல்வி ஆண்டுக்கான புதிய வகுப்புகள் கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் துவங்கி நடைபெற்ற நிலையில், வெயிலின் தாக்கம் காரணமாக, கடந்த ஏப்ரல் 28ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை கோடை விடுமுறை விடப்பட்டது. இதேபோல், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையே கோடை விடுமுறை நீட்டிக்கப்படுமா? என்ற கேள்வி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் நிலவி வந்தது. ஆனால், வெயிலின் தாக்கம் சற்று குறைவாக இருந்ததால் விடுமுறை நீட்டிக்கப்படாது. ஏற்கனவே அறிவித்தபடி ஜூன் 2ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று கல்வித்துறை அறிவித்தது. இதையொட்டி கடந்த சில நாட்களாக பள்ளிகள் திறப்புக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தது. குறிப்பாக, அரசு பள்ளிகளில் சீரமைப்பு பணிக்கு நிதி ஒதுக்கப்பட்டு சிறிய பழுது பார்க்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
மேலும், கழிவறை, தண்ணீர் தொட்டி, வகுப்பறைகள் உட்பட பள்ளி வளாகம் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டது. இந்நிலையில், கோடை விடுமுறை முடிந்து புதுச்சேரி, காரைக்கால், மாகே மற்றும் ஏனாமில் உள்ள அனைத்து அரசு, அரசு நிதியுதவி மற்றும் தனியார் பள்ளிகள் திறக்கப்பட்டன. கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் உள்ள மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் காலையில் கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு பள்ளிகளுக்கு வந்தனர். அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் இனிப்பு, பென்சில், பேனா மற்றும் நோட்புக் வழங்கி உற்சாகமாக வரவேற்றனர். தொடர்ந்து, காலை வழிபாட்டுடன் வகுப்புகள் துவங்கி நடைபெற்றன. மேலும், பல அரசு பள்ளிகளுக்கு கல்வித்துறை அதிகாரிகள் சிறப்பு விருந்தினர்களாக சென்று மாணவர்களை வரவேற்று நன்றாக படிக்க வேண்டும் என்று அறிவுரை கூறினர்.
புதுச்சேரி, காரைக்கால், மாகே மற்றும் ஏனாமில் உள்ள அரசு பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த பள்ளிகளில் மாணவர்கள் ஆர்வத்துடன் வகுப்புகளுக்கு சென்றனர். அவர்களை ஆசிரியர்கள் வரவேற்றனர். புதுச்சேரி சாரம் அரசு தொடக்கப்பள்ளியில் மாணவ, மாணவிகளை வரவேற்கும் நிகழ்ச்சியில் வட்டம்-1 துணை ஆய்வாளர் அனிதா கலந்து கொண்டு மாணவர்களுக்கு இனிப்பு, புத்தகங்கள் மற்றும் எழுது பொருட்களை வழங்கினார். மேலும், மழலையர் வகுப்பு குழந்தைகளுக்கு ஆசிரியர்கள் கிரீடம் அணிவித்து வரவேற்றனர். இந்நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியை விஜயலட்சுமி மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். புதுச்சேரியில் ஒரு மாத விடுமுறைக்கு பிறகு நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டதால், பள்ளிகள் அமைந்துள்ள பகுதிகள் மற்றும் நகரப்பகுதியில் உள்ள முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் போக்குவரத்து நெரிசலை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.