கடலூர், மார்ச் 10: கடலூர் துறைமுகத்தில் மீன்கள் வாங்க பொதுமக்கள் அதிக அளவில் குவிந்தனர். ஒரு கிலோ வஞ்சிரம் ரூ.900க்கு விற்பனை செய்யப்பட்டது. கடலூரில் அக்கரைகோரி, சோனங்குப்பம், சிங்காரத்தோப்பு, தாழங்குடா, தேவனாம்பட்டினம் உள்ளிட்ட மீனவ கிராமங்கள் உள்ளன. இங்குள்ள பொதுமக்கள் மீன்பிடி தொழிலையே பிரதானமாக கொண்டுள்ளனர். கடலூர் துறைமுகத்தில் இருந்து தினந்தோறும் ஏராளமான விசை மற்றும் பைபர் படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க சென்று வருகின்றனர்.
இதனால் ஞாயிற்றுக்கிழமைகளில் கடலூர் துறைமுகம் மீன் விற்பனை தளத்தில் அதிகாலை முதல் மீன் விற்பனை தொடங்கிவிடும். அதன்படி ஞாயிற்றுக்கிழமையான நேற்று கடலூர் துறைமுகத்தில் மீன்கள் வாங்க ஏராளமான பொதுமக்களும், வியாபாரிகளும் குவிந்தனர். இதனால் வஞ்சிரம் மீன் ஒரு கிலோ ரூ.900க்கும், வவ்வால் மீன் ஒரு கிலோ ரூ.650க்கும், நெத்திலி மீன் ஒரு கிலோ ரூ.300க்கும், பாறை ஒரு கிலோ ரூ.350க்கும், சங்கரா மீன் ஒரு கிலோ ரூ.350க்கும், இறால் வகைகள் ரூ.300 முதல் ரூ.400 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.