கடலூர், செப். 6: தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் பேரூராட்சியில் செயல் அலுவலராக பணியாற்றி வந்தவர் தரன்(55). தற்போது தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள இவர், கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலை சேர்ந்தவர். கடந்த 2017-2018ம் ஆண்டில் பணிபுரிந்தபோது மேலும் இரண்டு பேருடன் சேர்ந்து ரூ.4,25,700 கையாடல் செய்ததாக தஞ்சாவூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு கும்பகோணம் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், வழக்கு விசாரணைக்கு மதுக்கூர் முன்னாள் பேரூராட்சி செயல் அலுவலர் தரன், பலமுறை ஆஜராகாததால் கடந்த 2023ம் ஆண்டு ஜூலை 19ம் தேதி கும்பகோணம் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது. எனினும் அவர் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக உள்ளதாக தெரிய வருவதால், கும்பகோணம் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வரும் அக்டோபர் 10ம் தேதி தலைமறைவு குற்றவாளி தரன் நேரில் ஆஜராக வேண்டும் என கும்பகோணம் தலைமை குற்றவியல் நடுவர் சண்முகப்பிரியா உத்தரவு பிறப்பித்துள்ளார். இத்தகவல் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.