வடலூர், ஜூன் 6: கடலூரில் இன்று சாலை பாதுகாப்பு குழு ஆய்வு கூட்டம் நடக்கிறது. இதில் மூன்று அமைச்சர்கள் பங்கேற்கின்றனர். பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை சார்பில் சாலை பாதுகாப்பு குழு ஆய்வு கூட்டம், கடலூர் மாவட்ட கலெக்டர் கூட்டரங்கில் இன்று காலை நடக்கிறது. இந்த கூட்டத்திற்கு பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமை தாங்குகிறார். வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சரும் கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், மேற்கு மாவட்ட செயலாளரும் தொழிலாளர் நலத்துறை அமைச்சருமான சி.வெ.கணேசன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
கடலூர் மாவட்டத்தில் நெடுஞ்சாலை துறை சார்பில் பராமரிக்கப்படும் சாலைகள் மற்றும் கடலூரில் இருந்து சிதம்பரம் வரை விரிவாக்கப்படும் சாலை, வடலூரில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலை பணிகள் விரைவாக முடிப்பது உள்பட பல்வேறு நெடுஞ்சாலை பணிகள் குறித்து ஆலோசனைகள் வழங்கப்படுகிறது. எம்எல்ஏக்கள், நெடுஞ்சாலைத்துறை செயலாளர், கடலூர் ஆட்சியர் அருண் தம்புராஜ், நெடுஞ்சாலைத்துறை மற்றும் மாவட்ட உயரதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொள்கின்றனர்.