சாயல்குடி, மே 15: கடலாடி வட்டத்தில் சிறு பாசன கணக்கெடுப்பு மற்றும் நீர்நிலைகள் கணக்கெடுப்பு குறித்த பயிற்சி கூட்டம் வட்டாட்சியர் தலைமையில் நடைபெற்றது. கடலாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் முருகேஷ் தலைமையில், சிறுபாசன கணக்கெடுப்பு, நீர்நிலைகள் கணக்கெடுப்பு பணிகள் குறித்து பயிற்சி கூட்டம் நடைபெற்றது. சிறு பாசன கணக்கெடுப்பு ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை எடுக்கப்படுகிறது. சிறு பாசன பிரிவு சார்ந்த தெளிவான புள்ளி விவரங்களை திரட்டி நீர்வள ஆதாரங்களை மேம்படுத்துவதற்காக இந்த கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.
வருவாய் கிராம அளவில் நீர் பாசனத்திற்கு பயன்படும் கண்மாய்கள், குளங்கள், கிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணறுகள் தொடர்பான விவரங்கள் கிராமபுறங்களில் கிராம நிர்வாக அலுவலர்கள் மூலமும், பேரூராட்சி வார்டுகளில் பேரூராட்சி பணியாளர்கள் மூலமும் இக்கணக்கெடுப்பு நடைபெற உள்ளது என வட்டாட்சியர் தெரிவித்தார்.
மேலும் தேசிய தகவல் மையம் உருவாக்கிய கைபேசி செயலி வாயிலாக இக்கணக்கெடுப்பு விவரங்கள் சேகரிக்கப்பட உள்ளது. இந்த கூட்டத்தில் மண்டல துணை வட்டாட்சியர்கள், வட்டாரப் புள்ளியியல் ஆய்வாளர்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
ஆர்.எஸ்.மங்கலத்தில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் 7வது சிறுபாசனக் கணக்கெடுப்பு மற்றும் 2வது நீர் நிலைகள் தொடர்பான பயிற்சி, வட்டாச்சியர் அமர்நாத் தலைமையில் நடைபெற்றது.
இக்கணக்கெடுப்பு தொடர்பான பயிற்சியில் அலுவலர்களுக்கு புள்ளியியல் அலுவலர் பத்மநாதன் விளக்கி கூறி பயிற்சி அளித்தார். இதில் மண்டல துணை வட்டாச்சியர் அழகப்பா, வட்டாரப் புள்ளியியல் ஆய்வாளர்கள்,வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் அனைத்து கிராம நிர்வாக அலுவலர்கள், பேரூராட்சி பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.