சென்னை, ஆக.25: சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே 4வது ரயில்பாதை அமைக்கும் திட்டத்திற்காக, சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரி வரை இயக்கப்படும் பறக்கும் ரயில்கள், வரும் 27ம் தேதி முதல், சிந்தாதிரிப்பேட்டையில் இருந்து வேளச்சேரி வரை இயக்கப்படும், என தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. சென்னை கடற்கரை – தாம்பரம் வழித்தடத்தில் தினசரி 250க்கும் மேற்பட்ட ரயில் சேவைகள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் நாள்தோறும் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பயணம் செய்கின்றனர். குறிப்பாக, அரசு மற்றும் தனியார் ஊழியர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர், தொழிலாளர்கள் உள்பட ஏராளமானோர் இந்த ரயில் சேவையை நம்பி உள்ளனர்.
இந்த வழித்தடத்தில் தற்போது, தாம்பரம் – எழும்பூர் இடையே 4 ரயில் பாதைகள் உள்ளன. ஆனால், எழும்பூர் – சென்னை கடற்கரை வரை 3 வழித்தடங்களே உள்ளன. இதில், 2 பாதையில் புறநகர் மின்சார ரயில்களும், ஒரு பாதையில் விரைவு மற்றும் சரக்கு ரயில்களும் இயக்கப்படுகின்றன. குறிப்பிட்ட இந்த வழித்தடத்தில் கூடுதல் ரயில் பாதை இல்லாததால், அதிக ரயில்கள் இயக்க முடியாத நிலை உள்ளது. இதுதவிர, வடமாநிலங்களுக்குச் செல்லும் ரயில்கள் பெரும்பாலும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்படுவதால், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் எப்போதும் கூட்டம் நிரம்பி வழிகிறது. இங்கு கூட்டத்தை குறைக்கும் நோக்கில், தாம்பரத்தில் இருந்து எழும்பூர் ரயில் நிலையம் வழியாக வட மாநிலங்களுக்கு ரயில்கள் இயக்க புதிய பாதை அவசியமாகிறது.
எனவே, சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே 4வது ரயில் பாதை அமைக்க வேண்டும், என பயணிகள் நெடுங்காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்பேரில், சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே 4.3 கி.மீ. தொலைவுக்கு 4வது புதிய ரயில் பாதை அமைக்க ரயில்வே வாரியத்துக்கு தெற்கு ரயில்வே பரிந்துரை செய்தது. மேலும், ரூ.300 கோடியில் திட்ட மதிப்பீடு செய்து, 4வது பாதைக்கு மண் பரிசோதனை முடிக்கப்பட்டு, கடந்த 2 ஆண்டுக்கு முன்பு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கு ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தது. இந்நிலையில், சென்னை கடற்கரை – எழும்பூர் இடையிலான 4வது பாதை அமைக்கும் திட்ட பணிகள் இம்மாத இறுதியில் தொடங்கப்பட உள்ளது.
இதற்காக, சென்னை கடற்கரை – வேளச்சேரி பறக்கும் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, வரும் 27ம் தேதி முதல், சென்னை கடற்கரை – சிந்தாதிரிப்பேட்டை இடையே பறக்கும் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டு, சிந்தாதிரிப்பேட்டையில் இருந்து வேளச்சேரிக்கு பறக்கும் ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்நிலையில், தெற்கு ரயில்வே சென்னை கோட்ட பொது மேலாளர் விஸ்வநாத் ஈர்யா நேற்று கோட்ட அலுவலகத்தில் நிருபர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே 4 கி.மீ தொலைவிற்கு 4வது வழிதட விரிவாக்க பணி ₹279 கோடி மதிப்பில், 7 மாத காலம் நடைபெற உள்ளது. இதன் காரணமாக சென்னை கடற்கரை – வேளச்சேரி வழித்தடத்தில் செல்லும் ரயில்கள் அனைத்தும் வரும் 27ம் தேதி முதல் சிந்தாதிரிப்பேட்டை நிலையத்தில் இருந்து வேளச்சேரிக்கு இயக்கப்படும். தற்போது தினமும் 122 ரயில்கள் சென்னை கடற்கரை – வேளச்சேரி வழித்தடத்தில் இயக்கப்படுகிறது. இதன் எண்ணிக்கை 80 ரயில்களாக குறைக்கப்பட்டு சிந்தாதிரிப்பேட்டை பறக்கும் ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும். தினமும் 48 புறநகர் ரயில்கள் ஆவடி – சென்னை கடற்கரை – வேளச்சேரி வழித்தடத்தில் இயக்கப்படுகிறது. கும்மிடிப்பூண்டி – சென்னை கடற்கரை – வேளச்சேரி வழிதடத்தில் 11 ரயில்கள் இயக்கப்படுகிறது. இதன் சேவை இனி வரும் 27ம் தேதி முதல் சென்னை கடற்கரை ரயில் நிலையத்துடன் நிறுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
வரைபடம் தயார்
சென்னை கோட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சென்னை கடற்கரை – வேளச்சேரி பறக்கும் ரயில் தடத்தை சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கு கொடுக்கும் திட்டம் இதுவரை உறுதியாகவில்லை. சென்னையில் ஒரே டிக்கெட்டில் அனைத்து பொது போக்குவரத்தையும் பயன்படுத்தும் திட்டம் தொடர்ந்து ஆய்வில் உள்ளது. இது தொடர்பாக சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம் தொடர் ஆய்வுகளை செய்து வருகிறது. கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையம் அமைக்கும் பணி தொடர்பான வரைபடம் தயாரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த திட்டம் முழுவதும் சிஎம்டிஏ நிதியில் செயல்படுத்தப்பட உள்ளது, என ரயில்வே கோட்ட மேலாளர் தெரிவித்துள்ளார்.
இணைப்பு பேருந்து சேவை
பறக்கும் ரயில் சேவையில் மாற்றம் காரணமாக, பயணிகள் நலன் கருதி, எழும்பூரில் இருந்து அல்லது மற்ற ரயில் நிலையங்களில் இருந்து வேளச்சேரி வழித்தடத்தை இணைப்பதற்கு கூடுதல் மாநகர பேருந்து சேவை தேவைப்படும் பட்சத்தில் வேண்டிய வழித்தடத்தில் கூடுதல் மாநகர பேருந்துகளை இயக்க மாநகர போக்குவரத்து கழகத்திற்கு தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் சார்பில் கோரிக்கை வைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.