சத்தியமங்கலம், அக்.27: சத்தியமங்கலத்தில் இருந்து கடம்பூர் செல்லும் மலைப்பாதை ஓரத்தில் நேற்று மதியம் ஒரு ஆண், பெண் இருவரும் மயங்கிய நிலையில் படுத்து கிடப்பதை அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் பார்த்தனர். இதுகுறித்து உடனடியாக கடம்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்து விட்டு 108 ஆம்புலன்ஸை வரவழைத்து இருவரையும் மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவ பரிசோதித்ததில் இருவரும் சாணி பவுடர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. இது குறித்து கடம்பூர் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் இருவரும் சத்தியமங்கலம் கோட்டுவீரம்பாளையம் பகுதியைச் சேர்ந்த பிரபு (38), இவரது மனைவி இந்திராணி (24) என்பது தெரிய வந்தது.
பிரபு ஃபாஸ்ட் புட் கடையில் வேலை பார்த்து வருகிறார். இந்திராணி பைனான்ஸ் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். தனியாக பாஸ்ட் புட் கடை நடத்தியதிலும், இத்தம்பதியின் 8 வயது மகனுக்கு காது குத்து விழா நடத்தியதிலும் கடன் ஏற்பட்டதால் மனமுடைந்து தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, கவலைக்கிடமாக இருந்த பிரபுவை பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். கணவன் மனைவி இருவரும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.