வருசநாடு, மார்ச் 6: கடமலை மயிலை ஒன்றியத்தில் வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார். தேனி மாவட்ட கலெக்டராக ரஞ்ஜீத் சிங் பொறுப்பேற்ற பின்னர் முதன்முதலாக நேற்று கடமலை-மயிலை ஒன்றியத்தில் ஆய்வு மேற்கொண்டார். கண்டமனூரில் ஆய்வை தொடங்கிய கலெக்டர் அங்கு நடைபெற்று வரும் 10க்கும் மேற்பட்ட வளர்ச்சிப் பணிகளை பார்வையிட்டார். அதைத்தொடர்ந்து கண்டமனூர் அங்கன்வாடி மையத்திற்கு சென்று அங்கு குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் மற்றும் தயாரிக்கும் முறை குறித்து பார்வையிட்டார்.
அதேபோல குழந்தைகளின் வருகை பதிவேட்டை ஆய்வு செய்தார். பின்னர் துரைச்சாமிபுரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் புதிதாக கட்டப்பட்டு வரும் வகுப்பறை கட்டிடப் பணிகளை பார்வையிட்டார். இதையடுத்து கடமலைக்குண்டு ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டு ஆன்லைன் மூலம் வீட்டு வரி வசூல் செய்வது குறித்தும் ஊரக வேலை பதிவேடுகளையும் பார்வையிட்டார். மேலும் கரட்டுப்பட்டியில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட கலைஞரின் கனவு இல்லத்தை பார்வையிட்டார். இந்த ஆய்வின்போது கடமலை-மயிலை ஒன்றிய ஆணையர் மாணிக்கம், க.மயிலாடும்பாறை துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன், உதவி பொறியாளர்கள் கார்த்திக், முத்துக்கனி, கடமலைக்குண்டு ஊராட்சி செயலர் சின்னச்சாமி, கடமலைக்குண்டு வர்த்தக சங்க பொருளாளர் மாரிமுத்து உள்ளிட்ட ஏராளமானோர் உடன் இருந்தனர்.