வருசநாடு, மே 25:கடமலை மயிலை ஒன்றியத்தில் கால்நடைகளுக்கு மருத்துவ முகாம் நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. கடமலை-மயிலை ஒன்றிய கிராமங்களில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக மாடு, வெள்ளாடுகள் நாட்டு ஆடுகள், செம்பரிஆடுகள், உள்ளிட்ட கால்நடைகள் வளர்ப்பில் ஏராளமானோர் ஈடுபட்டு வருகின்றனர். கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, கோம்பைத்தொழு, தும்மக்குண்டு, குமணன்தொழு, கண்டமனூர் உள்ளிட்ட கிராமங்களில் அரசு கால்நடை மருத்துவமனைகள் செயல்பட்டு வருகிறது.
ஒவ்வொரு வருடமும் குறிப்பிட்ட மாதங்களுக்கு இடையே கால்நடை பராமரிப்பு துறை மூலம் மாடுகளுக்கு இலவசமாக கானை நோய் தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது. கடந்த 1 வருடமாக கடமலை-மயிலை ஒன்றியத்தில் மாடுகளுக்கு கானை நோய் தடுப்பூசி செலுத்தப்படவில்லை. கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் கால்நடைகளுக்கு அதிக அளவில் புதுவகையான நோய் பரவி வருவதாகவும் மழை காலங்களில் கால்நடைகளுக்கு கானை நோய் தாக்குதல் அதிகளவில் காணப்படும்.
ஆனால் தற்போது வரை தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்படாத காரணத்தால் கானை நோய் பரவல் தொடங்கினால் பெரும்பாலான கால்நடைகள் நோயால் இறக்கும் அபாயம் உள்ளது. எனவே மழைக்காலம் தொடங்குவதற்கு சம்பந்தப்பட்ட கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கடமலை-மயிலை ஒன்றியத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தி மாடுகளுக்கு கானை நோய் தடுப்பூசி செலுத்த வேண்டும் என தெரிவித்தார்கள்.