வருசநாடு, செப். 4: கடமலை-மயிலை ஒன்றியத்தில் ஆண்டுதோறும் பங்குனி உத்திரம், சித்திரை திருவிழாக்களில் ரேக்ளா ரேஸ் போட்டி நடத்தப்படுகிறது. இதனால் இப்பகுதியை சேர்ந்தவர்கள் ரேக்ளா ரேஸ் மாடுகளுக்கு தீவிர பயிற்சி அளித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, குமணன்தொழு, வருசநாடு, வாலிப்பாறை, தும்மக்குண்டு, பாலூத்து, சிங்கராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ரேக்ளா ரேஸ் மாடு வளர்ப்பவர்கள் காலை, மாலை வேலைகளில் மாடுகளுக்கு ஓட்ட பயிற்சி அளித்து வருகின்றன.
மேலும், இந்த மாடுகளுக்கு மதியம் நேரத்தில் நீச்சல் பயிற்சியும் வழங்கப்படுகிறது. ரேக்ளா ரேஸ் மாடுகளுக்கு புன்னாக்கு, பருத்திப்பால், மூலிகைபால், பேரிச்சைபழம், வடிகஞ்சி, வாழைப்பழம், சத்துணவு மாவு உள்ளிட்ட உணவுகள் வழங்கப்படுகிறது. இதனால் இப்பகுதியில் உள்ள மாடுகள் ஓட்டப்போட்டியில் சிறந்து விளங்குகிறது. இந்த மாடுகளை வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்கள் விலைக்கு வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது.