வருசநாடு, ஜூலை 28: கடமலைக்குண்டுவில் உள்ளவேளாண்மைத்துறை அலுவலக கட்டிடத்தின் மேற்கூரை சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் இங்கு பணிபுரியும் பணியாளர்கள் அச்சத்துடன் பணிபுரிந்து வருகின்றனர். கடமலைக்குண்டு, கண்டமனூர் மயிலாடும்பாறை, வருஷநாடு தும்மக்குண்டு , மூலக்கடை குமணந்தொழு தங்கம்மாள்புரம் உள்ளிட்ட கிராமங்களை மையமாக வைத்து கடமலைக்குண்டில் வேளாண்மை துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
இந்த கட்டிடத்தின் மேற்கூரைகள் சேதம் அடைந்தும், கான்கிரீட் கம்பிகள் துருப்பிடித்து பழுதடைந்து கிடக்கிறது. இதனால் இங்கு பணிபுரியும் அதிகாரிகள் தினந்தோறும் அச்சத்தில் பணிபுரிந்து வருகின்றனர். மேலும் இந்த கட்டிடத்தை புதுப்பிக்க வேண்டும் என வேளாண்மைத்துறை அதிகாரிகள் மாவட்ட நிர்வாகத்திடம் தொடர்ந்து மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. எனவே, வேளாண்மை துறை அலுவலகத்தை புதுப்பிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.