திருவெறும்பூர், ஜூலை 1: திருவெறும்பூர் அருகே உள்ள குண்டூர் நடுத்தெருவைச் சேர்ந்தவர் மருதமலை மகன் ஐயப்பன் (23). கார் டிரைவர். திருமணமாகாத இவர், சொந்தமாக கார் வாங்கி வாடகைக்கு சவாரி ஓட்டி வந்தார். கடந்த சில மாதங்களாக அதிக நபர்களிடம் ரூ.10 லட்சம் அளவுக்கு கடன் வாங்கியிருந்தாராம். தொழில் சரியாக இல்லாத நிலையில், வாங்கிய கடனை அடைக்க முடியவில்லை. ஆனால், கடன் கொடுத்தவர்கள், கடனை கேட்டு தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. அவ்வப்போது, ஐயப்பனுக்கு உடல்நலப் பிரச்னையும் ஏற்பட்டுள்ளது.
இதனால் மனஉளைச்சலுடன் காணப்பட்ட ஐயப்பன், அருகிலிருந்த தனது சகோதரி அமிர்தவள்ளி வீட்டில் நேற்று தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் பற்றி நாவல்பட்டு போலீசார் ஐயப்பனின் உடலை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.