சேலம், பிப்.28: கடனை திருப்பி செலுத்திய பிறகும், அசல் ஆவணங்களை வழங்காத வங்கிக்கு ₹60ஆயிரம் அபராதம் விதித்து சேலம் நுகர்வோர் குறைதீர் ஆணையம் தீர்ப்பு கூறியது. சேலம் ஓமலூர் பக்கமுள்ள பன்னப்பட்டி சக்கரசெட்டிப்பட்டியை சேர்ந்தவர் மணி. விவசாயியான இவர், கடந்த 1993ம்ஆண்டு டிராக்டர் மற்றும் டிரில்லர் வாங்குவதற்காக ஓமலூரில்உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் ₹1லட்சத்து 69ஆயிரம் கடன் வாங்கினார். இதற்காக விவசாய கிரய பத்திரஅசல் ஆவணங்களை வங்கியில் கொடுத்திருந்தார். வாங்கிய கடனை முறையாக கட்டிவந்த நிலையில், குடும்ப சூழ்நிலை காரணமாக மாதாந்திர தவணை தொகையை செலுத்தாமல் நிலுவை ஏற்பட்டது. இதையடுத்து வங்கியின் சார்பில் மேட்டூர் சார்பு நீதிமன்றத்தில் கடனை வசூலிக்கும் வகையில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்நிலையில் மணி, கடந்த 2005ம் ஆண்டில் 2 தவணையாக ₹4 லட்சம் செலுத்தினார். வாங்கிய கடன் மற்றும் வட்டியை சேர்த்து அனைத்து தொகையையும் செலுத்தினார். பின்னர் கடனுக்காக வங்கியில் செலுத்திய அசல் கிரய பத்திர ஆவணங்களை கேட்டார். ஆனால் வங்கி அதிகாரிகள், ஆவணங்களை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தனர்.
இதையடுத்து சேலம் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு குழு மூலம் கடிதம் அனுப்பியும் ஆவணங்களை கொடுக்கவில்லை. இதையடுத்து தமிழ்நாடு நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பின் தலைவர் வக்கீல் அசோகன் மூலம் சேலம் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்தார். இவ்வழக்கு நிலுவையில் இருக்கும் நேரத்தில் வங்கி நிர்வாகம், புகார்தாரர் மணியை அணுகி அசல் ஆவணங்களை திரும்ப கொடுத்தது.
இவ்வழக்ைக விசாரணை நடத்திய நுகர்வோர் குறைதீர் ஆணையத்தலைவர் கணேஷ்ராம் உறுப்பினர் ரவி ஆகியோர், வங்கியின் சேவை குறைபாட்டிற்காக புகார்தாரருக்கு ₹30ஆயிரம், மனஉளைச்சலுக்காக ₹20ஆயிரம், வழக்கு செலவுக்காக ₹10ஆயிரம் என ₹60ஆயிரத்தை 2 மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என்றும் தவறும்பட்சத்தில் 9சதவீத வட்டியுடன் மனுதாரருக்கு வழங்க வேண்டும் என தீர்ப்பு அளித்தனர்.