சிவகாசி, அக். 23 : சிவகாசி பழனியாண்டவர்புரம் காலனியை சேர்ந்தவர் ரமேஷ்குமார் (57). இவர் சிவகாசி-திருவில்லிபுத்தூர் ரோட்டில் பெட்டிக்கடை நடத்தி வருகின்றார். இவருக்கு பாமா (45) என்ற மனைவியும், பாலாஜிகிஷோர் (23) என்ற மகனும், ஜெயதர்ஷினி (18) என்ற மகளும் உள்ளனர். ரமேஷ்குமார் தனது குடும்ப செலவுக்கும், மகன், மகள் படிப்பு செலவுக்கும் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் நகை, பணம் கடனாக வாங்கியதாக கூறப்படுகிறது. தற்போது நகைகள் மற்றும் பணம் கொடுத்தவர்கள் திருப்பி கேட்டுள்ளனர். கடன் வாங்கியவர்களுக்கு பணத்தை திருப்பி கொடுக்க முடியாமல் ரமேஷ்குமார் மனஉளச்சலில் இருந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று காலை தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள போவதாக எஸ்.எம்.எஸ். அனுப்பிய ரமேஷ்குமார், தனது மனைவி பாமா, மகன் பாலாஜி கிஷோர், மகள் ஜெயதர்ஷினி ஆகியோர் எலி மருந்தை குடித்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த சிவகாசி டவுன் போலீசார் ரமேஷ்குமார் வீட்டிற்கு சென்று 4 பேரையும் மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் சிவகாசியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.