சென்னை, ஆக.26: சென்னையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும், விரைவான மற்றும் பாதுகாப்பான போக்குவரத்துக்காகவும், மெட்ரோ ரயில் சேவையை மக்கள் அதிகளவில் பயன்படுத்துகின்றனர். பயணிகளின் வசதிக்காக, கியூஆர் குறியீடு பயணச்சீட்டு, பயண அட்டைகளை பயன்படுத்தி பயணிக்கும் பயணிகளுக்கு 20 சதவீத கட்டண தள்ளுபடி, வாட்ஸ்அப்பில் பயணச்சீட்டு எடுக்கும் முறை உள்ளிட்ட வசதிகளை ரயி வழங்குகிறது. இதன்காரணமாக, கடந்த 7 மாதங்களில் மெட்ரோ ரயிலில் பயணம் செய்தவர்கள் எண்ணிக்கை 25 சதவீதம் உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த ஜனவரி மாதம் மெட்ரோ ரயிலில் பயணம் செய்தவர்கள் எண்ணிக்கை மட்டுமே, சராசரியாக ஒரு நாளைக்கு 2.13 லட்சமாக இருந்துள்ள நிலையில், கடந்த ஜூலை மாதத்தில் 2.66 லட்சமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக, ஜூலை மாதத்தில், ஒரு நாளைக்கு சராசரியாக 23,473 பயணிகள் சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தை பயன்படுத்தியுள்ளனர். இதற்கு அடுத்ததாக திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து தினமும் சராசரியாக 13,934 பேர் பயணம் செய்துள்ளனர். விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து 13,088 பேர் பயணம் செய்தனர். ஆயிரம் விளக்கு மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து தினமும் 11,219 பேர் பயணம் செய்துள்ளனர்.
அதன்படி பார்த்தால், சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையம் முதலிடத்தில் உள்ளது. இங்கிருந்து, ஜனவரி முதல் ஜூலை வரை ஒரு நாளைக்கு சராசரியாக 4,114 பேர் பயணம் செய்துள்ளார்கள். இந்த வரிசையில் ஆயிரம் விளக்கு மெட்ரோ அடுத்த இடத்தில் உள்ளது. இங்கு சராசரியாக ஒரு நாளைக்கு 3,229 பயணிகளும், கிண்டி மெட்ரோவில் ஒரு நாளைக்கு கூடுதலாக 3,001 பயணிகளும் பயணம் செய்துள்ளனர்.
சதவீத அதிகரிப்பின் அடிப்படையில், ஷெனாய் நகர் மெட்ரோ ரயில் நிலையம் தான் பயணிகளின் எண்ணிக்கையில் அதிகபட்சமாக 45.1 சதவீத உயர்வை பதிவு செய்தது. நங்கநல்லூர் மெட்ரோ ரயில் நிலையம் 42.8 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்து 2வது இடத்தைப் பிடித்துள்ளது. அரும்பாக்கம் மற்றும் ஆயிரம் விளக்கு ரயில் நிலையங்களை முறையே 40.6 சதவீதம் மற்றும் 40.4 சதவீத பயணிகள் பயன்படுத்தியுள்ளனர்.