வாலாஜாபாத், நவ.26: கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்ட, நகர பேருந்தை மீண்டும் ஏலக்காய் மங்கலம் கிராமம் வரை இயக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியம் குண்ணவாக்கம் ஊராட்சியில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். மேலும், ஊராட்சியில் ஆரம்ப சுகாதார நிலையம், அங்கன்வாடி மையம், இ சேவை மையம், ஒன்றிய நடுநிலைப்பள்ளி, நூலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.
இந்நிலையில், குண்ணவாக்கம் ஊராட்சியில் இருந்து பேருந்து நிறுத்தத்திற்கு மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள குண்ணவாக்கம் கூட்டு சாலை பேருந்து நிலையத்திற்கு செல்ல வேண்டும். இதனால், இங்குள்ள முதியவர்களும், பள்ளி மாணவ, மாணவிகளும் நாள்தோறும் நடைப்பயணம் மேற்கொண்டு பேருந்து நிறுத்தத்தில் இருந்து வாலாஜாபாத், ஒரகடம், தாம்பரம், படப்பை உள்ளிட்ட பல்வேறு நகர்ப்புற பகுதிகளுக்கு நாள்தோறும் சென்று வருகின்றனர். மேலும், வாலாஜாபாத் மற்றும் காஞ்சிபுரம் பகுதிகளில் செயல்படும் கல்லூரி மற்றும் பள்ளிகளுக்கும் நாள்தோறும் இங்குள்ள மாணவர்கள் சென்று வருகின்றனர்.
இந்நிலையில், காஞ்சிபுரம் பணிமனை சேர்ந்த அரசு பேருந்து தடம் எண் டி5 காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து ஏலக்காய் மங்கலம் வரை இயக்கப்பட்டது. அப்போது, இப்பகுதி பள்ளி மாணவ, மாணவிகளும், முதியவர்களும், பெண்களும் பெரும் பயனடைந்து வந்தனர். இந்நிலையில், கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக இந்த டி5 பேருந்து இயக்கப்படாதநிலையில் இங்குள்ள கிராம மக்கள் நாள்தோறும் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்டது குண்ணவாக்கம் ஊராட்சி வாலாஜாபாத் – படப்பை சாலையையொட்டி உள்ளது. இந்த சாலையில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.
இங்குள்ள மக்கள் நாள்தோறும் பேருந்துக்காக மூன்று கிலோ மீட்டர் தூரம் நடை பயணம் மேற்கொண்டு தான் பல்வேறு நகர்புற பகுதிகளுக்கு நாள்தோறும் சென்று வருகின்றனர். மேலும், இங்குள்ள பள்ளி மாணவ, மாணவிகள், முதியவர்கள் மற்றும் பெண்கள் என பலதரப்பு மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக வாலாஜாபாத் தான் செல்ல வேண்டும். ஏனெனில் வாலாஜாபாத்தில் தான் வட்டார வளர்ச்சி அலுவலகம், தாலுகா அலுவலகம், வங்கிகள் என பெரும்பாலான அலுவலகங்கள் செயல்படுகின்றன. இந்த அலுவலகங்களுக்கு நாள்தோறும் கிராமமக்கள் நூற்றுக்கணக்கானோர் வாலாஜாபாத் சென்று வருகின்றனர்.
மேலும், இங்குள்ள பள்ளி மாணவ, மாணவிகளும் வாலாஜாபாத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பயில்வோர் அதிகம். அரசு மருத்துவமனைகளுக்கு நாள்தோறும் இங்குள்ள முதியவர்களும், பெண்களும் சென்று வருகின்றனர். இதுபோன்றநிலையில், காஞ்சிபுரம் அரசு போக்குவரத்து கழகம் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்ட இந்த டி5 பேருந்தை மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி கிராம மக்கள் வலியுறுத்துகின்றனர்.
கால் வலிக்க நடக்கும் மாணவர்கள்
வாலாஜாபாத் ஒன்றியம் குண்ணவாக்கம் ஊராட்சி இங்குள்ள பள்ளி மாணவ, மாணவிகள் நாள்தோறும் வாலாஜாபாத், காஞ்சிபுரம் பகுதிகளில் செயல்படும் கல்லூரி மற்றும் பள்ளிகளுக்கு செல்ல வேண்டும். அப்படி செல்லவேண்டும் எனில், கிராமத்திலிருந்து மூன்று கிலோ மீட்டர் தூரமுள்ள குண்ணவாக்கம் கூட்டுரோடுக்கு நடந்து சென்று பேருந்துகள் மூலம் சென்று வருகின்றனர். காலையும், மாலையும் மூன்று கிலோமீட்டர் நடக்கும் பள்ளி மாணவ-மாணவிகள் உடல் உபாதையால் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.
ஊராட்சி நிர்வாகம்
பலமுறை கோரிக்கை
வாலாஜாபாத் ஒன்றியம் குண்ணவாக்கம் ஊராட்சி சார்பில் நிறுத்தப்பட்ட டி5 அரசு பேருந்தை மீண்டும் இயக்க வலியுறுத்தி பலமுறை காஞ்சிபுரம் போக்குவரத்து அலுவலகத்தில் மனு அளித்தும், ஊராட்சி கிராம சபை கூட்டங்களில் தீர்மானங்கள் நிறைவேற்றியும் இதுவரை போக்குவரத்து அலுவலர்கள் செவிசாயக்கவில்லை என கிராம மக்கள் கூறுகின்றனர்.
இலவசமாக பயணிக்க முடியவில்லை
வாலாஜாபாத் ஒன்றியம் குண்ணவாக்கம் ஊராட்சியில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்ட டி5 பேருந்து வராததால் இங்குள்ள பெண்கள், முதியவர்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். அரசு வழங்கிய திட்டத்தில் மிக அற்புதமான திட்டமான பெண்களுக்கான இலவச பயண திட்டத்தை எங்கள் கிராம பெண்கள் எங்கள் ஊரில் இருந்து பேருந்தில் இலவசமாக பயணிக்க முடியவில்லை என கூறுகின்றனர்.