கோவை, நவ.22: கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், போதை பொருட்கள் தடுப்பு தொடர்பான ஒருங்கிணைந்த கூட்ட குழு ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், துணை கமிஷனர்கள் சண்முகம், சந்தீஷ், மாவட்ட எஸ்பி பத்ரி நாராயணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் நகர், புறநகர் பகுதியில் கஞ்சா, போதை மாத்திரை, போதை ஸ்டாம்ப், ஹெராயின் உள்ளிட்ட போதை பொருட்கள் தடுப்பு தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.
ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, மகராஷ்டிரா, பீகார், ஜார்கண்ட் போன்ற மாநிலங்களில் இருந்து கோவைக்கு ரயில், இதர வாகனங்களில் கஞ்சா, ஹெராயின் போன்றவை கடத்தப்படுகிறது. நகர், புறநகரில் இந்த பொருட்களை வாங்கி சிலர் பதுக்கி விற்கிறார்கள். கல்லூரி மாணவர்கள், ஐடி இளைஞர்கள் என குறிப்பிட்ட சிலரை மையப்படுத்தி போதை வஸ்துக்கள் விற்கப்படுகிறது. இதை தடுக்க ஒருங்கிணைந்த சோதனை நடத்த வேண்டும்.
கடத்தி வரும் கும்பல் யார், இந்த கும்பலின் பின்னணியில் இருப்பவர்கள், கல்லூரி பகுதிக்கு சப்ளை செய்பவர்கள், கடைகளில் பதுக்கி வைத்து விற்பவர்கள், நகர், புறநகரில் போதை பொருட்கள் விற்பனை செய்யும் இடங்கள் போன்றவற்றை உடனடியாக அடையாளம் கண்டு சோதனை நடத்த வேண்டும். மொத்த நெட்வொர்க் அறிந்து அனைத்து நபர்களையும் பிடிக்க வேண்டும் என இந்த கூட்டத்தில் உத்தரவிடப்பட்டது. நகரில் தெற்கு, வடக்கு பகுதியில் தனிப்படை, புறநகரில் ஒரு தனிப்படை என 3 தனிப்படைகள் அமைத்து போதை கும்பல் குறித்து விசாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. போதை இல்லாத நிலையை உருவாக்க தீவிரம் காட்ட வேண்டும் என போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவு வழங்கப்பட்டது.