கடலூர், ஆக. 10: கடலூர் துறைமுகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தலைமையிலான போலீசார் கடலூர் முதுநகர் அருகே உள்ள பச்சையாங்குப்பம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த சிலர் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓட முயன்றனர். அவர்களைப் பிடித்து போலீசார் விசாரணை செய்தனர். விசாரணையில், கடலூர் முதுநகரை சேர்ந்த தீனா (19), நெப்போலியன் (18), சரவணன் (24), பச்சையாங்குப்பத்தை சேர்ந்த 16 வயது சிறுவன் ஆகியோர் என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 400 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.