சேத்தியாத்தோப்பு, நவ. 4: சேத்தியாத்தோப்பு அருகே பூதங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட பாழ்வாய்க்கால் பகுதியில் நேற்று டிஎஸ்பியின் தனிப்படை குற்றப்பிரிவு சிறப்பு எஸ்ஐ ராஜா, தலைமை காவலர்கள் சங்கர், ரஜனி, விஜயகுமார், புகழ் உள்ளிட்ட குழுவினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த இரண்டு வாலிபர்களை பிடித்து சோதனையிட்டு விசாரணை செய்ததில், முன்னுக்குபின் முரணாக பதில் அளித்தனர். சோதனையில், அவர்களிடம் ஒரு கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில், பெருங்காலூர் காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்த முருகவேல் மகன் அஜித்(25), குமாரக்குடி குளத்துமேட்டு தெருவை சேர்ந்த ரவி மகன் வல்லரசு(21) என தெரிய வந்தது. இருவரையும் கைது செய்து ஒரத்தூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். தீவிர விசாரணைக்கு பின் சேத்தியாத்தோப்பு டிஎஸ்பி ரூபன்குமார் உத்தரவின் பேரில் 2 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.