மதுரை, ஜூன் 30: மதுரை மாநகர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸ் எஸ்ஐ சுந்தரபாண்டியன் மற்றும் போலீசாருக்கு, பெத்தானியாபுரம் பகுதியில் கஞ்சா விற்பனை தீவிரமாக நடைபெறுவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் இரு குழுக்களாக பெத்தானியாபுரம் மேட்டுத் தெரு சுண்ணாம்பு காளவாசல் பகுதியை கண்காணித்தனர். அப்போது கார் மற்றும் பைக்கில் வைத்து சிலர் கஞ்சா விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து அங்கிருந்த 11 பேரை போலீசார் அதிரடியாக சுற்றி வளைத்தனர்.
இருப்பினும் அவர்களில் இருவர் அங்கிருந்து தப்பிய நிலையில், பெத்தானியாபுரம் பகுதியை சேர்ந்த ஷேக் பாட்ஷா மகன் சிக்கந்தர்பாட்ஷா(28), ஆரப்பாளையம் கிருஷ்ணன் மகன் கௌதம்(25), கிருஷ்ணகிரி மாவட்டம் அனுப்பநத்தம் கருக்கும்பட்டியை சேர்ந்த குப்பன் மகன் சிவன்(33) உட்பட ஒன்பது பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மூன்றரை கிலோ கஞ்சா, கார், 2 பைக்குகள், செல்போன், ரூ.10 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தப்பிச்சென்ற இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.