விக்கிரவாண்டி, ஆக. 17: விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் போதை பொருட்கள் விற்பனை செய்வதாக விழுப்புரம் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் மாவட்ட கண்காணிப்பாளர் தலைமையில் சிறப்பு தனி படை அமைக்கப்பட்டு விழுப்புரம் மாவட்டம் முழுதும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று விக்கிரவாண்டி அருகே வி.சாலை பகுதியில் சிறப்பு தனி படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்துக்குரிய 3 நபர்களை பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதில் மூவரும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.
தொடர்ந்து அவர்களிடம் இருந்து 80 கஞ்சா பாக்கெட்டுகளும், 3000 ரூபாய் ரொக்க பணம் மற்றும் 2 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். விசாரணையில் வி.சாலை பகுதியை சேர்ந்த புகழேந்தி மகன் வெங்கடாஜலபதி (26), ரவி மகன் யுவராஜ் (21), சித்தணி பகுதியை சேர்ந்த கலிவரதன் மகன் அழுகுவேல் (40) என்பதும், வெளி மாவட்டங்களில் இருந்து கஞ்சா கடத்தி வந்து வீட்டில் வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. தொடர்ந்து மூவர் மீதும் போலீசார் வழக்கு பதிவு கைது செய்து சிறையில் அடைந்தனர். இதுபோன்று குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எஸ்.பி எச்சரித்துள்ளார்.