திருப்பூர், ஜூலை 28: திருப்பூர் மாநகரில் கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட போதைப்பொருள்கள் விற்பனையை முற்றிலுமாக தடுக்க மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன் குமார் அபினபு உத்தரவிட்டுள்ளார். அதன்படி, மாநகர் முழுவதும் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், அனுப்பர்பாளையம் பகுதியில் இன்ஸ்பெக்டர் பிரேமா தலைமையிலான போலீசார் ஓலப்பாளையம் தண்ணீர் தொட்டி அருகே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, சந்தேகப்படும்படி வந்த 2 பேரை நிறுத்தி சோதனை செய்தபோது அவர்கள் இரு சக்கர வாகனத்தில் கஞ்சா பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். தொடர்ந்து, அவர்களிடம் விசாரணை நடத்திய போது அவர்கள் கோவை சிங்காநல்லூரை சேர்ந்த கருப்பையா (41), மங்கலம் இடுவம்பாளையத்தை சேர்ந்த தணிகைவேல் (30) என்பதும் தெரியவந்தது. இவர்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து அருள்புரத்தில் பதுக்கி வைத்து திருப்பூர் மாநகரின் பல்வேறு பகுதிகளுக்கு சப்ளை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 4.50 கிலோ கஞ்சா, 2 இரு சக்கர வாகனம் மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர்.