காஞ்சிபுரம், ஆக.23: காஞ்சிபுரம் அருகே காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாலாறு மேம்பாலம் பகுதியில், புதரில் தினந்தோறும் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காஞ்சிபுரம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு நேற்று முன்தினம் ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், இன்ஸ்பெக்டர் சந்திரவடிவு உத்தரவின்பேரில், எஸ்ஐ சந்திரசேகரன் தலைமையில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் சக்ரவர்த்தி, அசோகன் ஆகியோர் பாலாறு மேம்பாலம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்றுகொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரித்தபோது, முன்னுக்குபின் முரணாக பதிலளித்ததால், அவர் வைத்திருந்த பையை சோதனை செய்ததில் கஞ்சா இருந்தது. இதனால் போலீசார், அவரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து நடத்திய விசாரணையில், செவிலிமேடு பாலமடை பகுதியை சேர்ந்த சந்திரன் மகன் விஜயகுமார் (27) என்பதும், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. மேலும், அவரிடமிருந்த சுமார் 2 கிலோ 600 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதனையடுத்து, கைதான விஜயகுமார் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நேற்று புழல் சிறையில் அடைத்தனர்.