சேலம், மே 26: சேலம் கன்னங்குறிச்சி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பெரியகொல்லப்பட்டி காந்திநகர் மைதானம் பகுதியில் சிலர் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், இன்ஸ்பெக்டர் சுபாஷ் தலைமையிலான போலீசார், நேற்று முன்தினம் மாலை அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, மறைவான இடத்தில் இருந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த பிரபல ரவுடியான சூரமங்கலம் திருவாகவுண்டனூர் புத்தர்தெருவை சேர்ந்த கேசவன் (25) என்பவரை மடக்கி பிடித்தனர்.
அவரிடம் இருந்து ரூ.11 ஆயிரம் மதிப்புள்ள 1.100 கிலோ கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அந்த கஞ்சாவை அவர், சிறிய பொட்டலங்களாக இளைஞர்களுக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து, கைது செய்தனர். பின்னர், ரவுடி கேசவனை சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, மத்திய சிறையில் அடைத்தனர்.