வேலூர், அக்.6: வேலூர் அருகே கஞ்சா விற்பனை செய்த வாலிபரை மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து ஒன்றரை கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். வேலூர் அடுத்த கருகம்பத்தூர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யபப்பட்டு வருவதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் வேலூர் மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் போலீசார் அப்பகுதியில் நேற்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கருகம்பத்தூர் சுடுகாட்டு பகுதியில் சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் இருந்த ஒருவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அதேபகுதியைச் சேர்ந்த ராகுல்(21) என்பதும், இவர் கஞ்சா விற்பனை செய்து கொண்டு இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்து ஒன்றரை கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.