கூடலூர் பிப்.27: தேனி மாவட்டத்தில் பல்வேறு கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய ஆந்திராவைச் சேர்ந்த வாலிபரை, அவரது சொந்த ஊருக்கே சென்று தனிப்படை போலீசார் கைது செய்தனர். தேனி மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை தடுக்க, போலீஸ் எஸ்பி உத்தரவின் பேரில், போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதனடிப்படையில் உத்தமபாளையம் டிஎஸ்பி மேற்பார்வையில், கம்பம் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் பார்த்திபன் மற்றும் சார்பு ஆய்வாளர்கள் கதிரேசன், மணிகண்டன், இளையராஜா ஆகியோர் தலைமையிலான தனிப்படையினர் கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய தலைமறைவு குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில், கடந்த 12ம் தேதி ஆந்திர மாநிலம் சென்று தங்கி 3 தலைமறைவு குற்றவாளிகளை பிடித்து வந்தனர். அதன் தொடர்ச்சியாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் தேவதானப்பட்டி, கம்பம் தெற்கு, கூடலூர் வடக்கு ஆகிய காவல் நிலையங்களில் 2024ம் ஆண்டு பதியப்பட்ட பல்வேறு கஞ்சா வழக்குகளில் தேடப்பட்டு வந்த சேக் மகபூ சுபானி என்பவர் ஆந்திர மாநிலம், பல்நாடு மாவட்டம், சிலகல்லூரிபேட்டாவைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்தது. இதையடுத்து தனிப்படையினர் ஆந்திரா சென்று சேக் மகபூ சுபானியை, அவரது சொந்த ஊரிலேயே கைது செய்தனர். பின்னர் அவரை கைதிகள் பரிமாற்ற வாரண்ட் மூலமாக தேனி மாவட்டம், கூடலூர் வடக்கு காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். விசாரணையில், சம்பந்தப்பட்ட கஞ்சா வழக்குகளில் அவருக்கு தொடர்பு இருப்பது உறுதியானது.
இதையடுத்து சேக் மகபூ சுபானி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த காமயகவுண்டன்பட்டியைச் சேர்ந்த கார்த்திக் (33) என்பவரை கூடலூர் காவல் ஆய்வாளர் வனிதாமணி தலைமையிலான போலீசார் நேற்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.